Tuesday, March 18, 2014

No to Capital Punishment

                                                       No to Capital Punishment
ஒரு மனிதன் எவ்வளவு பண்பட்டவன் என்பதற்கான அளவுகோல் அவன் தனது உற்றாரையும் நண்பர்களையும் எப்படி நடத்துகிறான் என்பது அல்ல; மாறாக அவன் தனது எதிரியை எப்படி நடத்துகிறான் என்பதே. அதைப் போலவே ஒரு சமூகம் அல்லது அரசு எந்த அளவிற்கு பண்பட்டிருக்கிறது என்பதற்கான அளவுகோல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் குடிமக்களை அது எப்படி நடத்துகிறது என்பதல்ல; மாறாக குற்றவாளிகளை எப்படி நடத்துகிறது அதாவது குற்றங்களுக்கான தண்டனைகள் என்னென்ன என்பதே அது எந்த அளவிற்கு பண்பட்டிருக்கிறது அல்லது நாகரீகமடைந்திருக்கிறது என்பதற்கான அளவுகோல். அந்த வகையில் மரண தண்டனை ஒரு அளவுகோல். கொலைக்குக் கொலை என்பதே மரண தண்டனையின் அடிப்படை. ஒரு காலத்தில் ஐரோப்பா உட்பட உலகின் பல பகுதிகளில் திருட்டுக் குற்றங்களுக்கும் மண உறவிற்கு வெளியிலான பாலுறவுகளுக்கும் கூட மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் படி மிக மிகக் கொடூரமான கொலைக்குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுவதாக சொல்லப்பட்ட போதிலும் எல்லா சமயங்களிலும் அது உண்மையல்ல.

பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு உட்பட எல்லா முற்போக்கான விஷயங்களுமே மிகச் சிறுபான்மையினரின் கருத்தாக தொடங்கி பெரும்பான்மையான மக்களால் ஏற்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. இதற்கு மரண தண்டனை ஒழிப்பும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கருத்துக் கணிப்பில் 40 சதவிகித மக்கள் மரண தண்டனைக்கு எதிராக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுவே கடந்த 40 ஆண்டுகளில் மரண தண்டனைக்கு எதிராக கிடைத்த ஆதரவின் உச்சம். 1990களின் மத்தியில் இது 20 சதவிகிதமாக இருந்தது. இன்று இந்தியாவில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டால் மரண தண்டனைக்கு எதிரான ஆதரவு இதை விடக் குறைவாகவே இருக்கும். பாலியல் வன்முறையுடன் கூடிய கொலைகளுக்கு என்று குறிப்பாக கேட்டால், அதிலும் பெண்களிடம் கேட்டால் மரண தண்டனைக்கான ஆதரவு அநேகமாக 99 சதவிகிதமாக இருக்கும். இது ஆச்சர்யத்திற்குரியது அல்ல. மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும் ஐரொப்பிய நாடுகளில் கூட சில கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை தேவையே என 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கருதுகின்றனர். மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து பெரும்பான்மை மக்களின் கருத்தாக மாற இன்னும் பல பத்தாண்டுகள் ஆகக் கூடும். அப்படியொரு நிலை உருவாக மரண தண்டனைக்கு எதிராக குரலெழுப்பும் முற்போக்காளர்கள் தங்களது சில வறட்டுத்தனங்களை கைவிடுவதும், தாங்கள் போராடுவது குற்றவாளிகளுக்கு ஆதரவாக அல்ல மாறாக ஒரு நாகரீகமான சமூகத்தை உருவாக்கவே என்பதை உறுதிபடுத்துவதும் அவசியம்.

மரண தண்டனையை முற்றாக ஒழித்திருக்கும் பல வளர்ந்த நாடுகள் கூட முதிரா பருவத்தினர் தொடர்பான வழக்குகளில் தண்டனை வழங்கும் போது குற்றத்தின் தன்மையை முக்கியமாக கணக்கிலெடுக்கின்றன. ஆனால் இந்தியாவில், டெல்லி கும்பல் பாலியல் வன்முறை மற்றும் கொலையில் ஆக மோசமாக நடந்துகொண்ட ‘சிறுவன்’ 18 வயதிற்கு மூன்று மாதங்கள் குறைவு என்பதால் இளஞ் சிறார்களுக்குரிய எளிய தண்டனையே வழங்கப்பட வேண்டும் என்று முற்போக்காளர்கள் வறட்டுத்தனமாக வாதிட்டது சாதரண மக்களிடம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. தண்டனைக் கோட்பாடுகளிலேயே தலையாயது ஒரு குற்றவாளி தனது குற்றத்திற்கு பொருத்தமான சிறைத் தண்டனை பெற வேண்டும் என்பதுதான். இதற்கடுத்தபடிக்கு முக்கியமானவை மூன்று விஷயங்கள்: அதே குற்றவாளியால் மீண்டும் ஒரு நபர் பாதிக்கப்படுவதை முற்றாக தடுப்பது,  குற்றம் புரிவோரிடம் அச்சத்தை ஏற்படுத்தி குற்றங்கள் மீண்டும் நடப்பதை தடுப்பது, குற்றவாளியை சீர்திருத்துவது. மிகக் கொடூரமான குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆயுள் சிறை என்பது  ஆயுள் முழுமைக்குமான சிறை என்பதை உறுதிபடுத்துவது என்பது மரண தண்டனைக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்குவதற்கு மிக அவசியம்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை என்றால் என்ன என்பது பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட விவாதத்தின் போது விதிவிலக்கின்றி எல்லோருமே ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் என்பதாக புரிந்து வைத்திருந்தததை அறிந்து ஆச்சர்யமடைந்தேன். ஆயுள் சிறை என்பது ஆயுள் முழுமைக்குமான சிறை என்ற எனது கருத்தை யாருமே ஏற்கவில்லை. தெளிவிற்காக அங்கேயே சர்வதேச சட்டப்படிப்பில் முதுகலை பயிலும் (ஏற்கனவே பி.எல். பட்டம் பெற்றவர்கள்) நண்பர்கள் சிலரை கேட்ட போது 20 ஆண்டுகள் என்றனர். அவர்களது அறியாமை எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஆயுள் சிறை என்பது ஆயுள் முழுமைக்குமே; குற்றவாளி திருந்திவிட்டார், அவர் சமூகத்துடன் இணைந்து வாழ்வதால் இனி யாரும் அவரால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று ஓர் அரசு கருதி அவரை விடுதலை செய்ய நினைக்கும் பட்சத்தில் கணக்கீட்டிற்காக 20 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் விதிவிலக்கின்றி எல்லா ஆயுள் கைதிகளும் சுமார் 14 ஆண்டுகளில் விடுதலையாவது என்பது இந்தியாவில் நியதியாகிவிட்டது.

ஆயுள் சிறையின் தலையாய நோக்கங்கள் இரண்டு: 1. கொடூரமான குற்றத்தை புரிந்தவர் அதற்கு உரித்தான தண்டனையை பெற்றாக வேண்டும். 2. இனியொரு அப்பாவி அவரால் பாதிக்கப்படும் நிலை நேரவே கூடாது. ஒரு குற்றவாளி திருந்திவிட்டாரா இல்லையா என்பதை  உறுதியாக தீர்மானிப்பது என்பது ஒரு சிறந்த உளவியல் நிபுணருக்கே சாத்தியமில்லை. ஆளுமைகளின் உருவாக்கத்தில் சுற்றுச்சூழலுக்கு முக்கியமான பங்கிருப்பதைப் போலவே மரபணுக்களுக்கும் முக்கிய பங்கிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேலும், இந்தியச் சிறைச்சாலைகள் குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்புகளை அளிக்கும் இடம் என்று நம்புவதற்கு ஒருவர் சர்வ முட்டாளாக இருக்க வேண்டும். இந்நிலையில் இந்தியாவில் ஆயுள் சிறை என்பது கேலிக்கூத்தாகிவிட்டது. குற்றமற்றவர் தண்டிக்கப்படுவது, குறிப்பாக மரண தண்டனை பெறுவது, எப்படி எப்பாடு பட்டேனும் தவிர்க்கப்பட வேண்டுமோ அதைப் போலவே ஒரு கொடூரமான குற்றவாளியால் மீண்டும் ஓர் அப்பாவி பாதிக்கப்படாதிருப்பதையும் உறுதி செய்தாக வேண்டிய அவசியம் ஓர் அரசுக்கு இருக்கிறது. மரண தண்டனையை ஒழிக்க குரலெழுப்புபவர்களில் பெரும்பாலனவர்கள் கொடூரமான குற்றங்களுக்கான ஆயுள் சிறை ஆயுள் முழுமைக்குமான சிறையாக இருந்தாக வேண்டும் என்பதைப் பற்றி பேசுவதேயில்லை என்பதால் மனித உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் எல்லாம் குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுகிறவர்கள் என்று பொதுமக்கள் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. பெண்களை, குழந்தைகளை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொல்பவர்கள், அரசு மீதான கோபத்தால் அப்பாவி பொதுமக்களை கொல்லும் தீவிரவாதிகள், மற்றும் பிற கொடூரமான கொலைகாரர்கள் என அனைவரும் ஆயுள் சிறை என்ற பெயரில் சுமார் 14 ஆண்டுகள் மட்டுமே சிறையிலிருப்பார்கள் என்ற நிலை தொடரும் வரை மரண தண்டனைக்கு எதிரான நியாயமான வாதங்கள் பொதுமக்களிடம் எடுபடாது. நீதி அளிக்கப்பட்டால் மட்டும் போதாது அது அளிக்கப்பட்டது என்று சந்தேகத்திற்கிடமின்றி மக்களுக்குத் தெரிய வேண்டும்.

எவ்வளவு கொடூரமான குற்றவாளிக்கும் ஒரு நாகரீகமான சமூகம் கொடூரமான தண்டனைகளை வழங்க முடியாது. மேலும், சிறைச்சாலைகள் கொடூரமான இடங்களாக இருப்பதையும் நாம் அனுமதிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் ஒரு நாகரீக சமூகமும் அரசும் தனது குடிமக்களின் பாதுகாப்பையும் சமூக அமைதியையும் உறுதி செய்தாக வேண்டும் என்பதால் கொடூரமானவர்கள் அவர்களது வாழ்நாள் முழுமைக்கும் சமூகத்திலிருந்து தனிமைபடுத்தப்படுவது மிகவும் அவசியம்.
   
க. திருநாவுக்கரசு   

1 comment: