சமாதான வழி
“சமாதானம் என்பது நாம் தேடி அலையும் நீண்ட
நெடுந்தொலைவில் இருக்கும் ஒரு இலக்கு அல்ல. நமது இலக்கை அடையும் வழியே சமாதானம்” என்று அழகாகக் கூறினார் மார்ட்டின்
லூதர் கிங் ஜூனியர். சமாதானத்தைத் தேடி அலைவது என்பது நம் நிழலை நாமே தேடுவது
போலாகும். சமாதானம் நாம் தினந்தோறும் நடந்து செல்ல வேண்டிய வழி.
“சமாதானம் என்பது, படிப்படியாக எண்ணங்களை
மாற்றி, மெதுமெதுவாகப் பழைய தடைகளை அகற்றி, அமைதியாக புதியனவற்றைக் கட்டி,
தினமும், வாரந்தோறும், மாதந்தோறும் முறையாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்வு” என்று எழுதினார் ஜாண் எஃப்.கென்னடி.
உலகில் சமாதானத்தை நிலை நாட்டுவதில் அக்காலத் தலைவர்கள் எவ்வளவு அக்கறையோடும்
அடிப்படையோடும் திகழ்ந்தனர் என்பதை மேற்கண்ட மேற்கோள்கள் காட்டுகின்றன.
இன்றும் என்றும் உலகெங்கும் உலக சமாதானத்தைப்
பற்றி அரசியல் தலவர்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர். சமாதானமே தங்கள் இலட்சியம்
என்று அறைகூவி வருகின்றனர். ஆனால் சமாதானம் வந்தபாடில்லை. எங்காவது ஓரிடத்தில்
போரும் வன்முறையும் தினந்தோறும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. சமாதானம் தங்கள்
இலக்கு என்றும் தங்கள் இலட்சியம் என்றும் கூறுகின்றார்களே தவிர அதுவே தங்கள் வழி
என்று எவரும் கூற மறுக்கிறார்கள்.
ஒரு காலத்தில் சமாதானமே தங்கள் இலக்கு என்று
கம்யூனிஸ்டுகள் கூறினர். அதுவே தங்கள் இலட்சியம் என்று அறைகூவினர். ஆனால் அதை அடைய
போர் ஒன்றே வழி என்றனர். போரைப் போரால்தான் ஒழிக்க முடியும் என்று மாசேதுங் புதிய
சமாதான வழியை முன்மொழிந்தார். சமாதானத்தை நாடிய நேருவை ஏமாற்றினர். அமைதியாக
இருந்த இந்தியாவுடன் போர் தொடுத்தனர்.
அரசியல்வாதிகள் அறைகூவும் சமாதானத்திற்கு
அர்த்தமே கிடையாது, அவர்கள் சமாதானத்தை என்றோ கொன்றுவிட்டனர். செத்துப்போன
சமாதனத்தை ஏலம்போட்டு விற்று விட்டனர். ஆனால் ஏலம் போட்டு விற்று விட்டதையே
திரும்பவும் ஏலம்போடும் சாமர்த்தியம் அவர்களுக்கு உண்டு. எனவேதான்
திரும்பத்திரும்ப சமாதானத்தைப் பற்றி அறைகூவல் விட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் சமாதான வழியில் ஒருபோதும் அரசியல் வாதிகள் நடப்பதில்லை. அது அவர்களுக்கு
இலட்சியம். ஆனால் நடக்கும் வழி அல்ல.
அமெரிக்காவில் ஒரு நகரத்தான் ஒரு
கிராமத்திற்குச் சென்று ஒரு கழுதையை 100 டாலருக்கு விலை பேசி முடித்தான். அடுத்த
நாள் கழுதையைக் கொண்டுவந்து தருவதாக கிராமத்தான் கூறினான். ஆனால் அடுத்த நாள் வந்த
கிராமத்தான் இரவு கழுதை செத்து விட்டதாகத் தெரிவித்தான்.
“அப்படியானால்
பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு!”
“பணத்தைச்
செலவழித்துவிட்டேன்!”
“பரவாயில்லை!
செத்த கழுதையைக் கொண்டுவந்து கொடுத்துவிடு!”
‘அதை
வைத்துக்கொண்டு நீ என்ன செய்வாய்?”
அப்பாவியான
கிரமத்தான் ஆச்சரியத்தோடு கேட்டான்.
“அதைப்பற்றி
உனக்கு என்ன? சொன்னதைச் செய்!”
கிராமத்தான்
செத்த கழுதையைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.
ஒரு
மாதம் கழித்துத் தற்செயலாகக் கிராமத்தான் அந்த நகரத்தானைத் தெருவில் சந்தித்தான்.
“அந்தச்
செத்த கழுதையை என்ன செய்தாய்?”
“
லாட்டரியில் விற்று 998 டாலர் சம்பாதித்தேன்1”
”எப்படி?”
“
கழுதையைப் பரிசாக வைத்து 2 டாலர் டிக்கட் 500 அடித்து
விற்று விட்டேன்!”
“யாரும்
புகார் சொல்லவில்லையா?”
“லாட்டரி
விழுந்த ஒரே ஒருவன் மட்டும் கூறினான். அவனுக்கு 2 டாலரைத் திருப்பிக் கொடுத்து
விட்டேன்!”
உலக
சமாதானத்தை எப்போதோ
கொன்றுவிட்ட அரசியல் வாதியும் சமாதானமே தனது இலக்கு என்று எப்போதும் பேசிக்கொண்டே
இருப்பான். ஆனால் சமாதான வழியில் ஒருபோதும் நடக்க மாட்டான்.
அது
ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்ட் என்றாலும், ஈராக்கில் அமெரிக்கா என்றாலும்,
இலங்கையில் ராஜபக்ஷே என்றாலும், காஷ்மீரில் பாக்கிஸ்தான் என்றாலும் அவர்கள்
சமாதானம் என்று சொல்வது செத்த கழுதையைத்தான்!
சமாதானம்
அவர்களுக்கு இல்ட்சியம்! அதுவே அவர்களுக்கு இலக்கு! ஆனால் கடைபிடித்து நடக்கும்
வழி அல்ல!
பென் செருபாபேல்
No comments:
Post a Comment