கண்ணுக்குக் கண் என்பது உலகம் முழுமையையும் குருடாக்கிவிடும் என்றார்
காந்தி. பழிக்குப் பழி என்ற வழிமுறை எவ்வளவு ஆபத்தானது என்பதையே
காந்தி சுருக்கமாக இவ்வாறு கூறுகிறார். நமக்குத் தெரியாமலேயே பல சமயங்களில் நாம் பலரின் மனதை புண்படுத்திவிடுகிறோம். மனம் புண்பட்டவர் அதற்கு பதிலடியாக நமது மனதை புண்படுத்துகிற போது, நமது செயலுக்கு எதிர்வினையாகத்தான் அவர் நம்மை புண்படுத்தியிருக்கிறார் என்பதை அறியாமல் கோபம் கொண்டு நாம் பதிலடி கொடுக்கத் தயாராகிறோம். இந்த விஷச் சுழற்சிக்கு முடிவு ஏதும் இல்லை. இந்நிலை மேலும் மேலும் ஒருவரையொருவர் புண்படுத்துவதில், துன்புறுத்துவதில் முடிகிறது.
‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
என்றார் திருவள்ளுவர். சிலர் அப்படி நாணுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் பெரும்பாலானவர்கள் நாணுகிறார்கள் என்பதும் உண்மையே. தனிமனித உறவுகளில் உருவாகும் பெரும்பாலான வன்முறைகளை மன்னிக்கும்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையால் தடுத்துவிட முடியும் என்பது ஓர் எளிய உண்மை. தாங்களது தவறுகளுக்காக, குற்றங்களுக்காக மன்னிக்கப்படுகிறவர்கள் பிறரின் குற்றங்களை, தவறுகளை மன்னிக்கும் மனப் பக்குவத்தை அடைகிறார்கள்.
அன்பு, கருணை, தன்னலமின்மை ஆகியவற்றைப் போலவே வன்முறை, கோபம், சுயநலம் ஆகியவையும் மனிதர்களது உள்ளார்ந்த குணங்கள். ஒவ்வொரு மனிதனும் இரண்டின் கலவையே. முழுமுதலான நல்லவர்களோ அல்லது தீயவர்களோ கிடையாது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
என்ற குறள் நாம் அன்றாட வாழ்வில் காணும் ஓர் எளிய உண்மை.
அன்பைப் போலவே வன்முறைக் குணம் என்பதும் மனிதனது மரபணுக்களிலேயே இருக்கிற விஷயம்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட தனிமனிதன் வன்முறை மிகுந்தவனாக ஆவதற்கான காரணம் மரபணுக்கூறுகள் மட்டுமல்ல. அப்படியிருப்பின் எல்லா மனிதர்களும், எல்லா சூழல்களிலும் வன்முறை மிகுந்தவர்களாக இருப்பார்கள், உலகமே பெரும் கொலைகளமாக, வன்முறைக்களமாக இருந்துவிடும். ஆகவே, குடும்ப, சமூக, மற்றும் பொருளாதாரக் காரணிகள் ஒரு மனிதனை சாந்தம் மிகுந்தவனாகவோ அல்லது வன்முறை மிகுந்தவனாகவோ ஆக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மிக வெளிப்படையான உண்மை. மரபணுக் காரணிகளும், சுற்றுச்சூழல் காரணிகளும் ஒன்றுடன் ஒன்று இயைந்து செயல்படுகிற போது ஒரு மனிதனின் ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது.
தனிமனிதர்களுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கோ இழைக்கப்படும் அநீதியே பெரும்பாலான நேரங்களில் வன்முறைக்கு காரணமாக அமைகிறது. அநீதி மிகுந்த ஒரு சமூக அமைப்பில் வன்முறை மிகுந்திருக்கும் என்பதை புரிந்துகொள்ள ஆழமான அறிவு எதுவும் தேவையில்லை. தனிமனிதர்களுக்கு இது எப்படி பொருந்துமோ அப்படியே தேசங்களுக்கும், மக்கள் குழுக்களுக்கும் பொருந்தும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை சுரண்டுகிற வரை, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை சுரண்டுகிற வரை, ஒரு தேசம் மற்றொரு தேசத்தை சுரண்டுகிற வரை உலகை அமைதிப் பூங்காவாக ஆக்குவது என்பது சாத்தியமில்லை. வன்முறைக்கான புறக் காரணிகள் நீடிக்கும் வரை மனிதனின் மரபணுக்களில் புதைந்திருக்கும் வன்முறை வெடித்துக்கொண்டே இருக்கும்.
மனிதர்களின் மிக அடிப்படையான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது மட்டுமல்ல, அவர்களது பண்பாட்டு உரிமைகள் உட்பட பிற உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் வன்முறையை மனித சமூகத்திலிருந்து அகற்றுவதற்கான அடிப்படைகள். பரிமாண வளர்ச்சியின் உச்சம் மனிதன். ஆனால் மனிதன் இன்னமும் தனது பரிணாம வளர்ச்சியின் உச்சத்தை அடைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஸ்டீவன் பிங்க்கர் என்ற உளவியல் அறிஞர் தனது சமீபத்திய புத்தகத்தில் கூறியிருப்பதைப் போல கடந்த
காலங்களோடு ஒப்பிடுகிற போது மனித சமூகத்தின் நிகழ்காலம் வன்முறை குறைந்தது. பண்டை தமிழகத்தில் கூட போர்கள் வீரத்தின் அடையாளமாக புலவர்களால் போற்றிப் பாடப்பட்டன. இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் உலகம் நிறைய மாறியிருக்கிறது. ஆனால் இன்னமும், ‘வல்லான் வகுத்தது வாய்க்கால்’ என்ற நிலைதான் சர்வதேச அரசியலில். வன்முறையற்ற உலகை நோக்கிய வளர்ச்சியில் மனிதகுலம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பதற்கு தார்மீக நெறிகள் ஏதும் செல்லுபடியாகாத இன்றைய சர்வதேச அரசியல் ஓர் உதாரணம்.
இந்தியாவிலும் சரி, உலகெங்கிலும் சரி பண்டைக் காலத்தோடு ஒப்பிடுகிற போது இன்றைய காலகட்டம் பண்பாட்டு வளர்ச்சியில் எவ்வளவோ மேம்பட்டது. அடிமை முறையும், சாதிக் கொடுமைகளும் நீதியானவையே, பெண்ணடிமைத்தனம் இயல்பானது என்று அறிஞர்கள் முதல் அறியாமை மிகுந்தவர்கள் வரை அனைவரும் கருதிய காலம் இன்று மலையேறிவிட்டது. சென்ற நூற்றாண்டு வரை நிலவிய சமூககங்களோடு ஒப்பிடுகிற போது இன்றைய சமூகத்தில் அமைப்பு ரீதியான வன்முறை பெரிதும் குறைந்திருக்கிறது. இப்படி மேலும் மேலும் பண்படுவது என்பது மனித இனத்தின் இயல்பு என்றாலும் அது தானாக நடப்பதில்லை. அதற்காக ஒரு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படுகிறது, எண்ணற்றவர்கள் தங்களது வாழ்வை அதற்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். மனித இனம் நீடிக்கும் வரை இப்போராட்டமும் நீடிக்கும்.
No comments:
Post a Comment