Õ¥leh¯ thH k±Èˆ¡f¯
நீங்கள் ஒருவரை மன்னிக்கும் போது
பழியுணர்ச்சியையும் வெறுப்புணர்வையும் விட்டுவிட வழிவகை ஏற்படுத்துகிறிர்கள்.
உங்களைக் காயப்படுத்தியவரை நியாயம் தீர்க்கும் எண்ணத்தை நிறுத்திவிடுகிறீர்கள்.
பழியுணர்ச்சி, வெறுப்புணர்வு, நியாந்தீர்த்தல் ஆகியவற்றிற்குப் பதிலாக பெருந்தன்மை,
இரக்கம், அன்பு ஆகியவற்றைப் பொழிகிறீர்கள். மன்னிக்கும் போது ஏற்படுத்தப்பட்ட
காயத்தை நீங்கள் மறப்பதுமில்லை விட்டுவிடுவதும் இல்லை. மாறாக, எதிர்
உணர்வுகளுக்குப் பதிலாக நேர் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும், நடவடிக்கைகளையும்
இட்டு நிரப்புகிறீர்கள் (Enright
et al.,1998).
சிலர் இயல்பாகவே தங்களையும் பிறரையும்
மன்னித்துக் கொள்கிறவர்களாய் இருப்பார்கள். தங்களைக் காயப் படுத்துகிறவர்களின்
குறிப்பிட்ட எந்த ஒரு செயலையும் இவர்களால் எளிதாக ஜீரணித்துக் கொள்ள முடியும்.
இந்தத் திறன் அற்றவர்களால் வேதனையும் துன்பமும் அடையும் போது மன்னிப்பது கடினமான
காரியமாக இருக்கும். ஆனால் சூழ்நிலையைப் பொருத்து அவர்களாலும் அவ்வாறு செய்ய
இயலும்.
இந்த மனநிலையை அடையக் கூடியவர்களால் நீண்ட
நாள் வாழ முடியும் என்று மன்னிப்பின் நலமளிக்கும் பயனைப் பற்றிய தற்கால ஆய்வுகள்
காட்டுகின்றன. லூதர் கல்லுரியின் மனநிலை ஆராய்ச்சியாளரான லோரன் தௌசெய்ன்டும் (Loren Toussaint) குழுவினரும் 66-ம் அதற்கு மேற்பட்டதுமான வயதுடைய
1500 அமெரிக்கர்களை மாதிரிகளாகக் கொண்டு, மன்னிப்பு, மதசார்பு, ஆன்மீகம்,
ஆரோக்கியம், ஆயுள்காலம் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கும் தொடர்பை ஆய்ந்து அதற்குச்
சரியாக “ மன்னித்து வாழுங்கள்” என்று பெயரிட்டனர். நடத்தை மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வு நீண்ட
ஆயுளுக்கு மன்னிப்பால் ஏற்படும் பயனை ஆய்ந்து கண்ட முதல் முயற்சியாகும்.
மதச்சார்பும் ஆன்மீகமும் பற்றிய கேள்விகள் கிறிஸ்தவ
நம்பிக்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால் தௌசெய்ன்டும் அவரது சக
ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வை முன்னாள் இந்நாள் கிறிஸ்தவர்களிடமும் மதசார்பற்ற
தனிநபர்களிடமும் மட்டுமே நடத்தினர். முதன்முறையாக ஆய்வுக்கு உட்படுத்தியவர்கள்
மூன்றாண்டுகள் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இதன் மூலம் முந்திய மதம்
மற்றும் மன்னிப்பு பற்றிய நம்பிக்கைகள் பிந்திய ஆரோக்கிய வாழ்வையும் வாழ்நாளையும்
தீர்மானித்ததா என்று ஆய்வு செய்ய முடிந்தது.
தௌசியன்டும்
அவரது ஆய்வுக் குழுவும் பின்வரும் ஏழு உட்கூறுகளைக் கொண்டு மன்னிப்பின் வாழ்வை
நீட்டிக்கும் பயனை அளவிட்டனர். நீங்கள் இவற்றை எவ்வாறு மதிப்பிடுவீர்கள் என்று
பாருங்கள்:
1.
பிறரை நிபந்தனையோடு மன்னிப்பது: மன்னிப்பு கேட்கும் வரை ஒருவரை
மன்னிக்ககூடாது என்று நினைகிறீர்களா? செய்த ஒன்றை மறுபடியும் செய்ய மாட்டேன் என்று
வாக்குறுதி அளித்த பின்னரே ஒருவரை மன்னிக்க ஒத்துக்கொள்வீர்களா?
2.
நிபந்தனை இன்றி பிறரை மன்னித்தல்: உங்களால் மன்னித்து மறந்துவிட
முடியுமா? உங்கள் மன்னிப்பைப் பெற இன்னொருவர் எதையும் விசேஷமாகச் செய்ய
வேண்டியதில்லை என்று எண்ணுகிறீர்களா?
3.
பிறரை மன்னிக்கவே கூடாது: பிறர் மேல் வன்மத்தை அப்படியே வைத்துக்
கொண்டு இருகிறீர்களா? செய்த ஒன்றைப் பற்றி பிறர் மேல் எத்தனை முறை உங்களுக்குக்
கோபம் எழுகிறது?
4.
கடவுளின் நிபந்தனையுடனான மன்னிப்பை நம்புதல்: கடவுளிடம் மன்னிப்பைப் பெற, செய்த
தவறை மறுபடியும் செய்ய மாட்டேன் என்று நீங்கள் உறுதியளிக்க வேண்டுமா? மன்னிக்க
வேண்டும் என்று கடவுளிடம் நீங்கள் கேட்க வேண்டுமா?
5.
கடவுளின் நிபந்தனையற்ற மன்னிப்பை நம்புதல்: எது எவ்வாறு இருந்தாலும் கடவுள்
மன்னிப்பார் என்று நம்புகிறீர்களா?
6.
உங்களை நீங்களே மன்னிக்கும் ஆற்றல்: கடந்த காலத்தில் நீங்கள் செய்த
ஒன்றைப்பற்றி மோசமான நினைவுகளால் வருந்துகிறீர்களா?
7.
பிறர் உங்களை மன்னித்து விட்டார்கள் என்பதாக உணருகிறீர்களா? நீங்கள் செய்த பழைய தவறுகளுக்காகவும்
நீங்கள் ஏற்படுத்திய துன்பங்களுக்காகவும் பிறர் இன்னும் உங்களைக் குற்றம்
சொல்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?
மதம், சமுதாய வகுப்பு, புகை மது போன்ற
ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை விலக்கி விட்டு நோக்கும்போது
மற்றவர்களை நிபந்தனையோடு மன்னிப்பதும் கூட வாழ்நாளைக் குறைக்கும் ஒன்றாகத்
திகழ்கிறது. மற்றவர்களை நிபந்தனையோடுதான் மன்னிப்பேன் என்ற நிலை எடுப்பவர்கள்
இயல்பாகவே மன்னிக்கும் சுபாவம் உள்ளவர்களை விட விரைவில் இறந்து போகிறார்கள்.
மன்னிப்பைக் கோரிபெற்றோ அல்லது உறுதி வாங்கிக்
கொண்டோதான் மன்னிக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் ஏன் விரைவில் இறந்து
போகிறார்கள்? இக்கேள்விக்குள் நுழைந்த ஆய்வாளர்கள் மன்னிப்பதற்கு நிபந்தனை
விதிப்பவர்கள் மனதில் வன்மம் கோபம் ஆகிய உணர்ச்சிகள் எப்போதும் குடிகொண்டிருக்கின்றன
எனவும் அவை இதயத்தைப் பாதிப்பதாகவும் கண்டு பிடித்தனர். இப்படிப்பட்ட எதிர்
உணர்ச்சிகளை வைத்துக் கொண்டே இருப்பது, மன அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. ஆயுள்
குறைவதற்குக் காரணமாகிறது. ஆகவே மன்னிப்பையும் தனித் தனி விசேஷக் கூறுகளாக உடைத்து
நோக்க வேண்டியது முக்கியமாகிறது.
நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பின் ஒரு
வெளிப்படையான் அமசம் என்னவெனில் உங்களுக்கு தீங்கு செய்தவர்களிடம் இருந்து ஒரு
பதில்வினை (response)
தேவைப்படுவதே. அந்த நபர் உயிரோடு இல்லாவிட்டாலோ அல்லது உங்களுடன் தொடர்பில்
இல்லாவிட்டாலோ அவர்களுக்கு உங்களால் மன்னிப்பை நல்க முடியாது. இது பற்றி டாக்டர்
தௌசெய்ன்ட் மின்னஞ்சல் மூலமாக எனக்கு அனுப்பிய தகவலில் “ இந்த நிபந்தனையை நிறைவு
செய்ய காலங்காலமாக்க் காத்துக் கிடக்கவோ அல்லது நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கவோ
நேர்ந்து விடுகிறது” என எழுதுகிறார். இவருள் பலர் தாங்கள் எதிர்
நோக்கிக் காத்துக் கிடந்த மன்னிப்பு கோரிக்கையை இறுதி வரை பெறவில்லை என்பதையே
ஆய்வின் முடிவு
அறிவிக்கிறது. மாறாக, தீங்கு செய்தவரை மன்னிப்பு கோராமலே நீங்கள் மன்னிக்க முடிவு
செய்து விட்டால் அதை எப்போது வேண்டுமானாலும் உங்களால் தொடங்கிவிட முடியும். உள்ள
அளவில் ரணம் ஆறத்தொடங்கிய உடனேயே உங்கள் உடல் ஆரோக்கியமும் பயனை அறுவடை செய்யத்
தொடங்கிவிடும்.
ஆய்வின் இரண்டாவது முடிவு ஆர்வத்தைக் கிளப்பும்
ஒரு திருப்பமாக அமைந்தது. கடவுளின் நிபந்தனையற்ற மன்னிப்பில் நம்பிக்கை
உடையவர்களின் ஆயுள் குறைவாக இருந்தது. ஆனால் புகைபிடித்தல் மது அருந்துதல்
ஆகியவற்றைத் தவிர்த்தவர்களோடு ஒப்பிட்டு நோக்கிய போது இவ்வகை நம்பிக்கைக்கும்
ஆயுளுக்கும் இடையில் இருந்த தொடர்பு மறைந்தது. எந்நிலையிலும் கடவுள் தங்களை
மன்னித்து விடுவார் என்று நம்பிக் கொண்டே குற்ற உணர்வு தரும் இத்தகைய இன்பங்களில்
மூழ்கியதே ஆயுள் குறைந்ததற்கான காரணமாக இருக்கலாம். மேலும் எந்நிலையிலூம் கடவுள்
நம்மை மன்னித்து விடுவார் என்று எண்ணும் போது நீங்கள் இடைபடும் மக்களிடம்
மன்னிப்பை கோருவதில்லை. இதனால் மோசமான சமூக உறவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
பிற மன்னிப்பு குறித்த அளவீடுகளுக்கும்
ஆயுளுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அவைகளும் முக்கியத்துவம் குறைந்தனவல்ல. மொத்தத்தில்
மன்னிப்பு என்பதே உளவியலுடனும் மன ஆரோக்கியத்துடனும் சம்பந்தப்பட்டதே.
மன்னிப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பைப்
பற்றிய பழைய ஆய்வுகள், இதயம், ஹார்மோன்கள், நோயெதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில்
மன்னிக்கும் குணத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளதாகக் காட்டின. மேலும்
மன்னிப்பதால் உளவியல் ரீதியாகவும் பயன் உள்ளது. உடனடியாக மன்னிக்கும் சுபாவம்
உள்ளவர்கள் எளிதில் மனச்சோர்வோ கவலையோ அடைவதில்லை; எனவே மகிழ்ச்சியாக இருப்பதற்கு
வாய்ப்புள்ளது. இத்தகைய உளவியல் மற்றும் உடலியல் தன்மைகளே ஆயுளைக் கூட்டுவத்ற்குக்
காரணிகளாக இருக்கலாம். உங்களுக்கு தீங்கிழைக்கப் படுகிறபோது நீங்கள் அதை எவ்வாறு
எதிர் கொள்கிறீர்கள் அல்லது எவ்வாறு உங்களை நீங்களே மன்னித்துக் கொள்கிறீர்கள்
என்பதை வைத்து உங்களுக்கு பலவிதமான ஆரோக்கியம் தரும் நன்மைகள் விளைகின்றன.
மன்னிக்கிறவர்கள் மற்வர்களை விட குறைவாக
மனச்சோர்வு, குறைந்த அளவில் இரத்த அழுத்த நோய், மிகச் குறைந்த மனவழுத்தம் மற்றும்
உடல் ரீதியான பிரச்சினைகள், சிறந்த நோயெதிர்ப்பு சக்தி, குறைந்த அளவில் இதய
சம்பந்தப்பட்ட நோய்களை உடையவர்களாக இருக்கின்றனர் என்று மன்னிப்பைப் பற்றிய ஒரு
வளர்ந்து வரும் ஆய்வு கண்டறிந்து உள்ளது.
உளவியல் நிபுணரான ஃபிரட் லஸ்கின் பிஎச்.டி (Fred
Luskin) ஸ்டான்ஃபோர்ட்
பல்கலைக்கழக மன்னிப்பு செயல்திட்டத்துறை இயக்குநராகவும் அப்பல்கலையின் ஆரோக்கிய
மேம்பாட்டு முயற்சிகளின் முதுநிலை ஆலோசகராகவும் உள்ளார். ‘Forgive
for God: A proven Prescription for Health and Happiness’ என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும் அவரே.
இந் நூலில், பாதிப்பில் இருந்து விலகி வளமும் நலமும் நிறைந்த வாழ்வை நோக்கி நகர
ஒன்பது படிநிலையுள்ள மன்னிக்கும் முறையை வகுத்தளிக்கிறார். அவையாவன;-
1.
நடந்ததைப்
பற்றி நீங்கள்எவ்வாறு உணருகிறீர்கள் என்பதைச் சரியாக புரிந்து கொள்ளுங்கள். அந்தச்
சூழ்நிலையில் எது தவறு என்பதை தகுந்த முறையில் விளக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பின் நீங்கள் நம்பும் ஒருவரிடம் உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்.
2.
உங்கள்
உணர்வுகளைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்களுக்குள் உறுதி
எடுத்துக் கொள்ளுங்கள். மன்னிப்பு என்பது உங்களுக்காகவே யன்றி மற்றவர்களுக்காக
அல்ல.
3.
மன்னிப்பு
என்பது உங்களைப் புண்படுத்திய நபரோடு சமாதானம் செய்து கொள்வதோ அல்லது அவர்களது
செயலை மன்னித்து விட்டுவிடுவதோ அல்ல. மன்னிப்பை இவ்வாறு அறுதியிடலாம்: “ உங்களைக்
குறைவாகக் காயப்படுத்தியதை பழிப்பதன் மூலமாகக் கிடைக்கும் சமாதானமும் புரிந்து
கொள்ளுதலும், வாழ்க்கை
அனுபவத்தை குறைந்த அளவுக்கே தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுதலும், உங்கள்
துன்பத்தின் கதையை மாற்றி அமைத்தலுமே.”
4.
என்ன
நடக்கிறது என்பதை சரியான முறையில் புரிந்து கொள்ளுங்கள். உங்களது அடிப்படை துன்பம்
உங்களை இக்ரண்டு நிமிடங்களுக்கு முன்னரோ அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்னரோ
பாதித்த விளைவுகளில் இருந்து வரவில்லை. காயப்பட்ட உணர்வுகளாலும், சிந்தனைகளாலும்,
உடலளவிலான பாதிப்பாலும் தற்போது நீங்கள் அனுபவிக்கும் வேதனையில் இருந்தே வருகிறது.
மன்னிப்பு, இந்தக் காயம்பட்ட உணர்வுகளை ஆற்ற உதவுகிறது.
5.
பாதிக்கப்பட்ட்தாக
எப்போது உணருகிறீர்களோ அப்போது உங்கள் உடலின் செயலிழப்பையோ அல்லது
எதிர்ப்புணர்வையோ குறைக்க எளிமையான் மனவழுத்தத்தைக் மட்டுப்படுத்தும் பயிற்சியை
மேற்கொள்ளுங்கள்.
6.
பிறரோ
அல்லது உங்கள் வாழ்க்கையோ உங்களுக்கு கொடுக்க விரும்பாத எதையும்
எதிர்பார்க்காதீர்கள். மற்றவர்களோ நீங்களோ இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்
என்று நீங்கள் எதிர்பார்க்கும் அமுல்படுத்த் முடியாத விதிகளை இனம்காணுங்கள். நீங்கள்
நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும், அன்பையும், அமைதியையும், வளத்தையும்
பெறமுடியும் என்று உங்களை நீங்களே நினைவு படுத்திக் கொண்டு அவற்றைப் பெற கடுமையாக
உழையுங்கள்.
7.
உங்களை
வேதனை படுத்திய அனுபவங்களை விலக்கி வைத்து விட்டு உங்களது நேர்மையான் இலட்சியங்களை
அடைய புதிய வழிகளில் உங்கள் சக்தியைச் செலவிடுங்கள். நீங்கள் அடைந்த காயத்தைப்
பற்றித் திரும்பத் திரும்ப சிந்திப்பதை விட்டு விட்டு நீங்கள் விரும்பியதை வேறு
வழிகளில் அடைய முயற்சி செய்யுங்கள்.
8.
உங்கள்
வாழ்க்கையை நன்றாக வாழ்வதே உங்களை வேதனைபடுத்தியவர்களைச் சிறந்த முறையில்
பழிவாங்குவதாகும். உங்கள் வேதனை உணர்வுகளை மீண்டும் மீண்டும் சிந்திப்பதின் மூலமாக
உங்களைக் காயப்படுத்தியவர்களுக்கு உங்கள் வாழ்க்கையின் மீது அதிகாரத்தை
அளிக்கிறீர்கள். உங்களைச் சுற்றிலும் இருக்கும் அன்பு, அழகு, இரக்கம் ஆகியவற்றைத்
தேடுங்கள். மன்னிப்பு என்பது தனிமனித ஆற்றலாகும்.
9.
உங்கள்
துன்பத்தின் கதையை மாற்றி அமைப்பதின் மூலம் மன்னிப்பு என்ற மகத்தான மாற்று ஒன்று
உங்களிடம் இருப்பதை நினைவூட்டுங்கள். மன்னிப்பை நடைமுறைப் படுத்திக் கோபம், வேதனை,
மனவழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றை மட்டுப்படுத்தி மாபெரும் உணர்வுகளான நம்பிக்கை,
அமைதி, இரக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை நோக்கி நகரலாம்.
முடிவாக, உங்கள் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்
மன்னிப்பின் மகத்தான பயனை அறுவடை செய்ய வேண்டுமானால், பிறர் உங்களிடம் மன்னிப்பு
கோர வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம் அல்லது அவர்கள் ஒரு நாள் மாறுவார்கள்
என்று உறுதிமொழி தரவும் வேண்டாம். உங்கள் மனதுக்குள் அந்த மாற்றத்தைத்
துவக்குங்கள். மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட காலம் வாழ்வீர்கள்.
Dr. Gangatharan (Translated by Ben Zerubabel)